ad

Wednesday, October 6, 2010

தமிழர்களே.......!!! தமிழுக்கு ஏதாச்சும் நடக்க விடலாமா?

தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ் 
எங்கள் உயிருக்கு நேர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தமிழர்களின் தாய்மொழி.
தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும் 
தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது  இடம் தமிழுக்குத்தான். 


இதெல்லாம் எல்லோரும் அறிந்த விடயம்தான் ஆனால் தமிழ் மொழிக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்ற கவலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது, காரணம் உலகெங்கிலும் அதிகமான தமிழர்கள் இருந்தாலும் அநேகமானவர்கள் இப்போது தமிழிலே உரையாடுவதைக் குறைத்துக்கொண்டு  வருகிறார்கள் இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதில் ஒரு சிலவற்றை தவிர்த்துக்கொள்ளலாம். இருந்தும் நாகரிக மோகம் காரணமாக சில வெளிநாடுகளில் உள்ளவர்கள் தமிழை பேச வெட்கப்படுகிறார்கள். 
இந்த போக்கானது தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவ்வளவு ஆரோக்கியமானதல்ல . இது ஒரு புறமிருக்க எதிர்காலத்தில் தமிழ் மொழி சந்திக்கவிருக்கின்ற இன்னுமொரு முக்கிய பிரச்சனை பற்றியும் இந்த இடத்தில் நாங்கள் பேசித்தான் ஆக வேண்டும் , அதாவது தற்போதைய ஒரு சில  எழுத்தாளர்கள் கையில் எடுத்திருக்கும் ''வட்டாரத்தமிழ்'' வழக்கு..
அதாவது ஒரு மொழியின் வளர்ச்சியானது அந்த மொழியை நேசிக்கின்ற ,சுவாசிக்கின்ற படைப்பாளிகள் அல்லது எழுத்தாளர்களது கையிலே அதிகம் தங்கி  இருக்கிறது. அப்படிப்பட்ட பொறுப்பு வாய்ந்த இடத்தில் இருக்கும் எழுத்தாளர்கள் அண்மைக்காலமாக கையாண்டு வருகின்ற இந்த ''வட்டார வழக்கு'' அவ்வளவு காத்திரமானது என்று சொல்வதற்கில்லை .
அதாவது தமிழை வட்டார வழக்கின் அடிப்படையில் பிரிக்ககூடாது ,அதேவேளை இந்த எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களை வட்டார சொற்களை  வைத்துக்கொண்டு தங்களது எண்ணங்களையும் நூல்களையும் வெளியிடக்கூடாது. 
இங்கே மண்வாசனையுடன் வெளிவருகின்ற நூல்களையும் படைப்புக்களையும் பற்றி குறைகூறவில்லை என்பதை கவனித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். 
  
இந்த போக்கு தொடர்ந்து சென்றால் பல்வேறு சிறப்புக்களை கொண்ட நமது தமிழ் மொழியானது பல் வேறு கூறுகளாக பிரிந்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கிறது அதன் பின்னர் எந்த வட்டாரத்தின் தமிழ் சிறந்த தமிழ் என்ற தேவையில்லாத விவாதங்களும் சண்டைகளும் தலைதூக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. காலப்போக்கில் தமிழ் மொழி பிழையான மொழி வழக்கை பின்பற்றக்கூடிய அபாயமும் இருக்கிறது.
எனவே தமிழ் சிறக்க பாடுபடும் அன்பான படைப்பாளர் பெருமக்களே உங்கள் படைப்புக்களில் இந்த வட்டார தமிழ் வழக்கை பயன்படுத்துவது தொடர்பாக கொஞ்சம் சிந்தியுங்கள் , தமிழை பிழையில்லாமல் எதிகால சந்ததியினருக்கு விட்டு செல்வோம். 


எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்.  
 
''தேமதுரத் தமிழோசை 
உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.''