ad

Sunday, May 31, 2009

ஒரு விடுகதை கவிதையாகிறது .

வழமைபோல நம்ம கவிவேந்தர் மூ. மேத்தா அவர்களின் கவிதைகளில் மூழ்கியிருந்த போது "என்னுடைய போதி மரங்கள் " போதித்த கவிதையொன்று உங்களோடு .......

ஒரு விடுகதை கவிதையாகிறது .

கால்களிலே தைக்காமல்
எங்கள்
கண்களிலே தைக்கின்ற
கடிகார முட்களே !
நீங்கள்
காலத்தின் கால்களோ?

! கடிகாரமே !
பேச்சை நிறுத்தாத
பெரிய மனிதனே !
குதிக்கும் உன்னுடைய
கால்களில் ஒன்று ஏன்
குட்டையாய் இருக்கிறது ?

காலங்கள் தோறும்
இருந்து வருகிற
ஏற்றத் தாழ்வை
எடுத்துக் காட்டவோ ?

பாவம்...
படிக்க எழுதப்
பழகாதவன் நீ!
என்றாலும்
சூரியனை பூமி
சுற்றி வருவதையே
சுருக்கெழுத்தில்
குறிப்பெடுக்கின்றாயே!

உழைத்தால் எப்போதும்
உயரலாம் என்பதற்கு
உதாரணம் நீ தானே ?

நீ
காலச்சக்கரவர்த்தியின்
கணக்குப்பிள்ளையோ ?

கைகளில் உன்னைக்
கட்டி வைத்த மனிதர்களை
உன்றன்
கால்களால் விரட்டுகிறாய் !

ஓயாமல் ஒழியாமல்
உழைகின்றாய்
இருந்தாலும்
வசவுகள் மட்டுமே
உனக்கு
வழங்கப்படுகின்றன !

சுருசுப்பானவர்கள்
உன்னை
'அவசரக் குடுக்கை'
என்று அழைக்கிறார்கள்.

சோம்பேறிகளோ
உன்னைத்
'தள்ளுவண்டி' என்று
எள்ளி நகைக்கிறார்கள்.

அதனால் என்ன ...
கடிகாரமே நீ
கவலைப்படாதே!

உன் பெருமை
ஆகாயம் போலவே
அளக்க முடியாதது !

ஏனென்றால்
வானம் கூட
பூமிப்பெண்
கட்டிகொண்டிருக்கும்
கடிகாரம் தான் .

அதில்
சிதறிவரும் முட்கள்தான்
சூரியனும் சந்திரனும்!

Thursday, May 28, 2009

ஐயோ அப்பிடியா ?????


உலகத்தில் ஒவ்வொரு நாளும் என்ன நடக்கிறது? என்றால் அதற்கு எவ்வளவோ பதிலா நம்மிடையே இருக்கிறது ,இதில் சில விசயங்களை எங்களால் நம்ப முடியாமல் இருக்கும் . அப்படியான விஷயமொன்றை இன்று பதிவினூடாக பகிர்ந்துகொள்ளலாம் என நினைக்கிறேன்.


உலகில் ஆயிரக்கணக்கான "மொழிகள் ' இருந்தாலும் ,பெருமளவில் 13 மொழிகளே பேசப்படுகின்றன , இதில் குறிப்பாக சீன மொழி,ஆங்கில மொழி,ரஷ்ய மொழி,ஸ்பானிய மொழி,இந்தி மொழி போன்றவை முன்னிலை வகிப்பது தெரிந்த விடயம்.

ஆனால் , உலகிலுள்ள மொழிகளில் 14 நாட்களுக்கு ஒருமுறை ஒரு மொழி அழிந்து வருகிறதாம் !!!!. தற்போது 7 ஆயிரம் மொழிகள் இப்படி அழியும் நிலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

பாருங்கள் மொழிக்கு வந்த சோதனையை !

இதற்கான அடிப்படை காரணங்கள் என்ன என சிந்தித்த போது பல்வேறு காரணங்கள் புலப்பட்டிருக்கின்றன அதில் குறிப்பாக ,

# குறிப்பிட்ட மொழியை பேசுபவர்கள் இறந்து போவதும் ஏனைய மொழிகள் அம மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்துவதுமே பிரதான காரணங்களாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

இதில் அநேகமான மொழிகள் ,பூர்வ குடிகளான மலைவாழ் மக்களின் மொழிகளாக இருப்பது குறிப்பிடத்தக்கது .


இதைவிடவும் இன்னுமொரு முக்கியமான விடயத்தையும் சொல்லவேண்டும் ,உலகில் இருந்த மொத்த மொழிகளில் அரைவாசிக்கு மேல் கடந்த ௫00 ஆண்டுகளில் அழிந்து போய்விட்டதாம் . அத்தோடு மீதமிருக்கும் பெரும்பாலான மொழிகளும் இந்த நூற்றண்டில் அழிந்து போக கூடிய சத்தியம் இருப்பதாகவும் மிகச் சொற்பமான மொழிகளே எஞ்சும் என்று ஆராச்சியாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.


இதில், அமெரிக்க பழங்குடியினர் பேசிய 40 மொழிகள், அவுஸ்திரேலியா பழங்குடியினர் பேசிய 153 மொழிகளும் அழிந்து வரும் மொழிகளின் பட்டியலில் இருப்பதாக சொல்ல படுகின்றது.

இத்தோடு இன்னுமொரு சுவாரஸ்யமும் இருக்கிறது அவுஸ்திரேலியா பழங்குடி மொழி ஒன்றை பேசும் நபர்கள் இருவர் மட்டுமே இப்போது உயிரோடு இருக்கிறார்களாம் இவர்களும் இறந்து போனால் அவர்களின் மொழியும் மறைந்துவிடும்.

எனவே குறைந்த பட்சம் அழிந்து வரும் மொழிகளை பதிவு செய்து பாதுகாக்கும் பணியில் ஆராச்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்களாம் .எனவே இந்த பணியில் நமது வலையுலக நண்பர்கள் யாராவது ஈடுபட்டாலும் மிக சிறப்பாக இருக்கும் . வாழ்த்துக்கள்.

Tuesday, May 26, 2009

நம்பினால் நம்புங்கள்....


"நம்பிக்கைதான் வாழ்க்கைஎன்பது போல நாங்கள் ஒவ்வொருவரும் எவ்வளவோ நம்பிக்கைகளோடு நமது வாழ்க்கையை ஓட்டி செல்கின்றோம் ,

ஆனால் சிலவேளைகளில் நமது நம்பிக்கைகள் ,


# சிலருக்கு விந்தையாகவும் ஆச்சர்யமாகவும் ...

# சிலருக்கு நகைச்சுவையாகவும் ......

# சிலருக்கு மூடத்தனமாகவும் இருக்கும் .


யார் எவ்வாறு நினைத்தாலும் நம்மில் பலர் தங்கள் நம்பிக்கைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள்.

இப்படியான சில சுவாரஸ்யமான நம்பிக்கைகள் அதுவும் அணிகின்ற ஆடைகள் சம்பந்தமாக உலக நாடுகள் சிலவற்றில் காணப்படுகின்ற நம்பிக்கைகள் சிலவற்றை பார்க்கலாம்.


ஐரோப்பிய மக்கள் ,

கீழே ஒரு சட்டை பொத்தானை கண்டெடுத்தால் ,புதிய நண்பர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறார்களாம் , அதேபோல தங்கள் ஆடைகளில் சிறிது பஞ்சு ஒட்டிகொண்டிருந்தால் , ஒரு முக்கியமான் கடிதம் வரும் என நம்புகிறார்களாம்.

இதேபோல ,

ஆடையை அணிந்தபடி ஒருவர் அதை தைத்து கொண்டால், அவருக்கு எப்பொழுதுமே பணப்பற்றாகுறை இருக்குமென்று இங்கிலாந்து மக்கள் நம்புகிறார்களாம். அது மட்டுமல்லாமல் ,


தங்களது தீர்மானங்களை சரிபார்த்து கொள்ளவும் இந்த ஆடைகள் சம்பந்தபட்ட நம்பிக்கைகளை சிலர் பயன் படுத்துகிறார்களாம் , அதாவது

தாங்கள் ஒரு விசயத்தில் எது சரி? எது பிழை ? என்று யோசிக்கும் போது ,

தமது சட்டை பொத்தான்களை எண்ணுகிறார்கள் அவ்வாறு எண்ணும் போது ,இரட்டைப்படை எண்கள் வந்தால் தாங்கள் நினைப்பது 'சரி' என்றும் ஒற்றைப்படை எண்கள் வந்தால் நினைப்பது 'பிழை ' என்றும் கருதுகிறார்களாம் .
இதேபோல ஆடையின் உட்புறத்தை தவறுதலாக வெளிப்புறம் வைத்து அணிந்து கொள்வது உலகின் பல்வெஉ பகுதிகளிலும் அதிஷ்டமாக கருதப்படுகிறதாம் .

பாத்தீங்களா ! நம்பிக்கை எவ்வாறெல்லாம் வடிவமெடுக்கிறது என்று !!!!
எது எவ்வாறாக இருந்தாலும் அடியேன் முழுமையான நம்பிக்கையோடு இருக்கிறேன் 'பின்னூட்ட எஜமானர்கள் தங்களது காத்திரமான கருத்துக்களை தருவீர்கள் என்று '
எனவே எனது நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்கும் தானே !!!!!!

Sunday, May 24, 2009

'நச்'என்று ஒரு பதில் .....


சுவாமி விவேகானந்தர் அதிகமாக பிரபலமடையாத காலத்தில் ,
தென்னிந்தியாவில் ரயில வண்டியில் பிரயாணம் செய்து கொண்டிருந்த வேளையில் , அந்த பெட்டியில் இருந்த வெள்ளைக்கார போர் வீரர்கள் துறவிகளை பற்றி படு கேவலமாக பேசிக்கொண்டிருந்தார்களாம் அதற்கு விவேகானந்தர் மறுத்து எதுவுமே பேசவில்லையாம் .

பிறகு கொஞ்சம் தூர ரயில் பிரயாணத்தின் போது சேலம் ஸ்டேஷன் இல் விவேகானந்தர் அதிகாரிகளுடன் ஆங்கிலத்தில் பேசுவதைப்பார்த்து வியப்படைந்த சிப்பாய்கள் ரயில் புறப்பட்டதும் 'உங்களுக்கு நன்றாக ஆங்கிலம் தெரிகிறதே அப்படியிருந்தும் நாங்கள் கூறிய கருத்துக்கள் குறித்து ஏன் எதுவும் பேசவில்லை ' என்று கேட்டார்களாம் .
அதற்கு விவேகனந்தர் "நான் முட்டாள்களை சந்திப்பது இது முதற்தடவையல்ல" என்று பதிலளித்தாராம் .
இதைதான் சொல்றது "நச்"..........

அதற்குபிறகு சிப்பாய்களின் முகம் என்ன ஆயிருக்கும் என அடியேன் சொல்ல தேவையில்லை .

சில அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள்
"முட்டாள்களை சமாளிக்க இலகுவான வழி மௌனமாக இருப்பதுதான் " என்பதையும் இந்த இடத்தில் சொன்னால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன் .

Saturday, May 23, 2009

கள்ள நோட்டும் நல்ல நோட்டும் .....



கண்ணில் படுகின்ற சில சம்பவங்கள் சிலவேளைகளில் நம்ம மூளையை போட்டு பிசைந்தெடுக்கும் , அதேவேளை ஆஹா இப்படியும் நடந்திருக்கா! என்று நம்மை வாயில் விரலைவைக்கும் அளவுக்கு இருக்கும் அப்படியான விசயமொன்று அண்மையில் அறிந்துகொள்ள கூடியதாக இருந்தது அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன் .

இருவருக்கிடையில் இடம்பெற்ற சுவாரசியமான சம்பாசனை ....

காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக பெரியவர் ஒருவர் பெட்ரோல் நிரப்பு(பெட்ரோல் பங்க் ) நிலையத்திற்கு சென்று ,500 ரூபாய் நோட்டை கொடுத்து அங்கேயிருந்த பையனிடம் பெட்ரோல் நிரப்பும்படி சொல்லியிருக்கிறார் அதற்கு அந்த பையன் ,
"ஐயா இப்பொழுதெல்லாம் கள்ள நோட்டுக்கள் புழக்கத்தில் இருப்பதால் 500 ரூபா நோட்டுக்களில் கையெழுத்து வாங்கிகொள்கிறோம் எனவே உங்கள் கையெழுத்தையும் போட்டு கொடுங்கள் " என்று சொல்லியிருக்கிறான் .

வந்தவரும் கொஞ்சம் கூட தயங்காமல் தனது கையெழுத்தை போட்டு கொடுத்திருக்கிறார் கையெழுத்தை பார்த்த பையன்
"ஐயா நான் , உங்கள் கையெழுத்தை போட சொன்னால் நீங்கள் நோட்டிலுள்ள கையெழுத்து மாதிரி போட்டிருக்கீங்களே !" என்றிருக்கிறான் .

அதற்கு அந்த பெரியவர் சிரித்தபடியே ....
" தம்பி அந்த நோட்டில் இருக்கும் கையெழுத்தும் என்னுடையதுதான்,
ஏன்னா நான் இப்போ ரிசேர்வ் பேங்க் கவர்னராக இருப்பதால் நோட்டுகளில் என்னுடைய கையெழுத்து இடம்பிடித்திருக்கிறது " என்றபடியே பொறுப்பாக பதில் சொன்ன படி நகர்ந்திருக்கிறார் அந்த பெரியவர் .

இந்த அனுபவத்திற்கு சொந்தகாரர் வேறு யாருமல்ல இந்தியா ரிசேர்வ் பேங்க் கவர்னர் H.V.R.ஐயங்கார் .

பாத்தீங்களா எவ்வளவு பொறுப்பு வாய்ந்தவர்களேல்லாம் இந்த உலகில் இருக்கிறார்கள்.

இது தவிர நண்பர் parthy தனது பதிவில் "கள்ள நோட்டுகளை எப்படி கண்டு பிடிப்பது சம்பந்தமாக எழுதியிருக்கிறார் , பார்க்க கிளிக்.

Thursday, May 21, 2009

சிந்தித்து பாருங்களேன் ......


பாழாப்போன வைரஸ் ஆல் நம்ம பதிவுகள் எல்லாமே கண்ணில் தெரியாமல் போய்விட்டது , இருந்தாலும் பரவாயில்லை விரைவில் எல்லா பதிவுகளும் மீண்டும் பதிவிடலாமென இருக்கும் இந்த நேரத்தில் "மாவீரன் Alexander "சொன்ன ஒரு அனுபவமொழியை உங்கள் பார்வைக்கு தரலாமென நினைக்கிறேன் .

" வெற்றி பெற வேண்டும் என நினைத்து போராடாதே ! தோல்வி அடையக்கூடாது என்று போராடு ! உலகம் உங்கள் கையில் ."

Tuesday, May 19, 2009

பாருங்க இப்படியாச்சே !!

எனது வலைபூவிற்கு ஏதோ நடந்துபோச்சு அதனால எல்லாமே போச்சு !!!!
இருந்தாலும் பரவாயில்ல கொஞ்சம் புதுசாய் புது பெயருடன் மீண்டும் உங்கள் அனைவரையும் சந்திக்கலாம் , தொடர்ந்தும் இணைந்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு ....